fbpx
Others

காங்கிரஸ்–அரியானா மைனாரிட்டி பாஜ அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

பேரவையில் மெஜாரிட்டி இழந்த அரியானா அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. அரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பீர் சங்வான்,ரந்தீர்சிங் கோலன்,தரம்பால் கோண்டர் ஆகியோர் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்த செவ்வாயன்று அறிவித்தனர். அதோடு காங்கிரசுக்கு ஆதரவு தருவோம் என்று கூறினர். 90 எம்எல்ஏக்கள் கொண்ட பேரவையில் பாஜவுக்கு 40, காங்கிரசுக்கு 30,ஜனநாயக ஜனதா கட்சிக்கு(ஜேஜேபி) 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.  இந்திய தேசிய லோக்தளம், அரியானா லோக்ஹித் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏவும், 6 சுயேச்சைகளும் உள்ளனர். பாஜவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேபி கட்சி கடந்த மாதம் விலக்கியது. அதன் பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜ அரசு வெற்றி பெற்றது. இப்போது 3 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், 2 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே அரசுக்கு உள்ளது. அரசுக்கான ஆதரவு பெரும்பான்மைக்கு 2 இடங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் பாஜவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.  ஆளுநர் மாளிகைக்கு சென்று மனு அளித்த அரியானா மூத்த காங்கிரஸ் தலைவர் பி.பி.பத்ரா, காங்கிரஸ் தலைமை கொறடா அப்தாப் அகமது ஆகியோர் கூறுகையில், ‘‘ஆளுநர் தெலங்கானாவுக்கு சென்று விட்டதால் அவரது செயலாளரிடம் மனு கொடுத்தோம். மெஜாரிட்டி இழந்துள்ள பாஜ அரசை உடனே டிஸ்மிஸ் செய்து விட்டு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். அதை செய்யாவிட்டால் பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கினை கோர முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

Related Articles

Back to top button
Close
Close