வால்பாறை அருகே டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதி – கடையை மாற்ற கோரிக்கை…

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொள்ளாச்சி – வால்பாறை பிரதான சாலையோரத்தில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், மதுபானம் வாங்கி அருந்திவிட்டு சிலர் போதையில் சாலையோரத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுப்பகுதியிலும் அமர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.மேலும், இந்த டாஸ்மாக்கடையின்அருகில்குடியிருப்புகள்,பள்ளி,தேவாலயங்கள் மற்றும் கோவில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பிடத்தக்க வகையில், இந்த டாஸ்மாக் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத பாதுகாப்பான பகுதியில் செயல்பட்டு வந்ததாகவும், பின்னர் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு மதுபானம் வாங்க கடைக்கு செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, பெரிய அளவிலான உயிர்சேதம் அல்லது விபத்துகள் ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அரசு துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடையை மீண்டும் பாதுகாப்பான மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும், அப்பகுதியில் நிரந்தர காவல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்திகளுக்காக:ஜெயபிரகாஷ் D
கோவை மாவட்ட புகைப்படக் கலைஞர்