உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது நடைபெற்றாலும் மக்கள் நீதி மய்யம் போட்டி

உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது நடைபெற்றாலும் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் மாதிரி கிராம சபைக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது;

கிராம சபைக்கான சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போது கிராம சபை சரிவர இயங்கவில்லை. இதற்கு அரசியல் சுயநலம், அரசியல் லாபம் என்று பல காரணங்களைச் சொல்லலாம். அதற்கும் மேலாக மக்களாகிய நாமும் கொஞ்சம் அசிரத்தையாக இருந்துவிட்டோம். குற்றம் யார்மீது என்பதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். செய்யும் கடமையில் இருந்து தவறிவிட்டோம் என்று நினைவுபடுத்திக் கொண்டு, மீண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, பல அமைப்புகளும் முயன்று வருகின்றன.

கிராம சபை என்றால் என்ன, வயலும் வாழ்வும் போன்று போரடிக்கும் விஷயமாக இருக்கிறது என்று நகரத்தில் இருப்பவர்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது வயலும் வாழ்வும் நகரத்தின் வாழ்வும் சம்பந்தப்பட்டது. கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்தின் அளவு மக்கள் தொகையைப் பொருத்து, இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 12,524 கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் நிதியை இந்தக் கிராமங்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டுப் பாருங்கள். தோராயமாக ஓராண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி. அப்போது 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பாருங்கள். அத்தனை பணமும் இருக்கிறது. அது சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி. இது சரிவரச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு கிராம சபைகள் அமைக்கப்படுகின்றன.

எனவே, கிராம சபைகள் நடந்தே ஆக வேண்டும். இந்தக் கணக்குகளை ஒவ்வொரு கிராம சபைத் தலைவரும் எல்லாருக்கும் முன்னால் வைத்து வாசித்துக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டும்போது ஊழல் குறையும். ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் நடந்துவிடாது.  முதலில் குறைப்பு, பின்பு தடுப்பு, பின்புதான் ஒழிப்பு.

அதைத் செய்வதற்கான அற்புதமான இந்தக் கருவியை 25 ஆண்டுகளாக கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை செய்யத் தொடங்கியிருந்தால் தமிழகத்தின் முகம் மாறியிருக்கும். மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, ஜனவரி 26 ஆகிய நான்கு தேதிகளிலும் கிராம சபைகள் கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் என்பது சட்டம்.

இந்தக் கூட்டம் நடக்கவேயில்லை என்று குறிப்பிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியினருக்கும்  மக்கள் நீதி மய்யம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு புரட்சி தொடங்கிவிட்டதாகவே முடிவு செய்யலாம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது;

நடிப்பதற்கு முன்னால் சில கற்பு தியாகங்கள் செய்ய வேண்டும் என்று வடநாட்டில் சிலர் சொல்கிறார்கள்.

பட வாய்ப்புகளுக்கு கற்பைத் தியாகம் செய்யச் சொன்னால், அதற்கு பெண்கள் உடன்படக் கூடாது. பாலியல் கொடுமைகளுக்கு எதிராக திரையுலக பெண்கள் துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளாக உள்ள கவிஞர் சினேகன், நடிகர் பரணி உட்பட பலர் பங்கேற்று  பல கோரிக்கைகளை எழுப்பினர். குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது, தொழிற்சாலைகளைக் கிராம சபையினரைக் கேட்டு அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.