ப.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்தது ; சிவசேனா அறிவிப்பு.

பாரதிய ஜனதா கட்சி உடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக சிவசேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மும்பையில் சிவசேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மக்களவை தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவது என சிவசேனா முடிவு செய்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையிலான பாஜக அரசுடன் கூட்டணியில் உள்ளது. இருப்பினும், மத்திய, மாநில பாஜக அரசுகளின் செயல்பாடுகளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தொடர்ந்து இருகட்சிகளிடையே முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், சிவசேனா தற்போது முறைப்படி பாஜக உடனான நட்பை முறித்துக் கொண்டது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே, பாஜக எங்களை புறக்கணித்து வருவதால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். சிவசேனா அறிவிப்பு குறித்து முதலமைச்சர் பட்னாவீஸ் கூறுகையில், பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.