உ.பியில் அதிர்ச்சி ;துண்டித்த காலை நோயாளி தலைக்கு தலையணையாக வைத்த கொடூரம்

விபத்தில் சிக்கியவரின் துண்டிக்கப்பட்ட கால்களை, அவருக்கே தலைக்கு தலையணையாக வைத்த சம்பவம், யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திர பிரதேச மாநில மருத்துவமனையில் நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி., மாநில அரசு எடுத்து நடத்தும், மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியதில், அவரின் இடது கால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், அவரின் கால் துண்டித்து எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

அதன்பின், அவரை கேஷுவல் வார்டுக்குள் அனுமதித்தனர். அப்போது, அதே மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த இளைஞருக்கு தலையணை கொடுப்பதற்கு பதிலாக, சிகிச்சையில் துண்டித்து எடுத்த அவரின் காலையே தலையணையாக வைத்துள்ளனர்.

இதை ரகசியமாக ஒருவர் படம் பிடித்து முகநூளில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதை அறிந்த மருத்துவமனை நிர்வாக குழுவினர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நான்கு பேர் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய இளைஞன் பள்ளி ஒன்றில், ஓட்டுனர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே உ.பி., மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.