குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ;குமரி கடற்பகுதி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: கன்னியாகுமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்யவில்லை.

இதனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவி வந்த நிலையில் தற்போது அதுவும் குறைந்துள்ளது. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் புழுக்கமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடாவில் அடுத்த 2 நாட்களுக்கு கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். வானிலை மையம் மற்றும் தமிழக அரசின் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.