நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன்;ராகுல்காந்தி பொளேர்!!

டில்லி:

”நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்புகளை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்” என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”பணமதிப்பிழப்பை நான் பிரதமராக இருந்திருந்தால் எப்படி கையாண்டிருப்பேன் தெரியுமா?. பணமதிப்பிழப்பு என்று எழுதப்பட்ட கோப்பு என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால் அதை குப்பைத் தொட்டியில் வீசியிருப்பேன்.

கதவுக்கு வெளியே குப்பை கொட்டும் இடத்தில் கொட்டியிருப்பேன். நான் இப்படி தான் பணமதிப்பிழப்பை கையாண்டிருப்பேன்” என்றார். முன்னதாக சிங்கப்பூரில் பாஜக அரசின் பிரிவினைவாத அரசியலை தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது .

வெளிநாடுகளில் இந்தியாவை ராகுல்காந்தி  அவமதிப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா பதில் கூறுகையில்,  பிரதமர் நரேந்திரமோடி தான் வெளிநாடுகளில் இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாறு குறித்து அவதூறாக பேசி ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் முதன்மை எதிர்கட்சியின் தலைவர் என்பதால் இந்த அரசின் உண்மையான முகத்தை ராகுல்காந்தி தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்” என்றார்.