குரங்கணி வனப்பகுதி காட்டுத் தீ: கல்லூரி மாணவிகள் 15 பேர் மீட்கப்பட்டதாக தகவல்.

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கியுள்ள 15 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை, ஈரோடை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு மலை ஏற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர். இன்று மாலை மலைப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் மாணவிகள் சிக்கியுள்ளதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போடி, தேனி, உத்தமபாளையம் தீயணைப்பு துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது :

குரங்கணியில் 10 முதல் 15 பேர் மீட்கப்பட்டு அடிவாரத்திற்கு இறங்கி வந்துகொண்டிருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் மற்ற மாணவ, மாணவிகளை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை, வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் தேயிலலைத்தோட்டத்தினரும் உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியில் சிக்கிய மாணவர்களை மீட்க விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணுவ விமானப்படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தேனி ஆட்சியருடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுமாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணியில் ஈடுபட கோவையிலிருந்து ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. மாணவிகளுக்கு மருத்துவ உதவி செய்ய ஆம்புலன்ஸ்கள் வந்துள்ளது. தீக்காயமடைந்த மாணவர்கள் டோலி மூலம் மலை அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இரவில் மாணவர்களை மீட்பது கடினம். காலையில் வெளிச்சம் வந்ததும் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்படுவர். ஹெலிகாப்டர்கள் மூலம் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும். மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.