மோடி அறிவித்திருந்த ரூ.15 லட்சம் எப்போது வங்கி கணக்கில் செலுத்தப்படும்? மாணவர் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்

பாராளுமன்ற தேர்தலின் போது மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது என்னை வெற்றி பெறச் செய்தால் இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன். வெளிநாடுகளில் உள்ள கடனை அடைப்பேன்.

மேலும் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மோடியின் இந்த பேச்சு வாக்காளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி அறிவித்த படி இதுவரை இந்திய மக்களின் வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் சோமநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பினார்.

அதில், பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்திய குடிமகன்கள் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அந்த பணம் எப்போது எங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்? அந்த தேதியை அறிவிக்கவும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பிரதமர் அலுவலக செயலாளர் பிரவீன்குமார் பதில் அனுப்பியுள்ளார். அதில் உங்களது இந்த கேள்வி தகவல் என்ற பிரிவின் கீழ் வரவில்லை. அதனால் பதில் அளிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.