அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?;சசிகலா பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஓபிஎஸ், மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சி ஆர் சரஸ்வதி ஆகியோர், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார்கள் . பின்னர் அதெல்லாம் பொய் என்று தெரியவந்தது.

அப்பல்லோவில் இருந்த 75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம்  தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையத்தில் ஆஜராகி பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா நேரில் ஆஜராகவில்லை அதற்கு பதிலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்றும் வேதனைபட்டார். கடும் மன அழுத்தத்தில் இருந்தார். அதுவே அவரது உடல்நிலையை பெரிதும் பாதித்தது என்று சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும்  போதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. எனவேதான் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் நிலை  பாதிக்கப்பட்டது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மாத்திரை சாப்பிட்டார். 19-ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது என்றும் சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 21-ஆம் தேதியே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்தார். 22-ஆம் தேதியன்று அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இரவு 9.30 மணியளவில் போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாகவும், ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாகவும் உடனடியாக ஜெயலலிதாவின் பாதுகாவலர் 2 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உடனடியாக அழைக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பின்னர் டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன். உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாகவும் பின்னர் அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார்.

அப்போது ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பியதாகவும்  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என்றும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யார் சந்தித்தார்கள்;

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது பார்த்தவர் பட்டியலும் பிரமாணபாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது செப்டம்பர் 22-27 தேதிகளில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்தனர்.

செப்டம்பர் 27-இல் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாள் சந்தித்தார். அப்போது அவர்களிடம் நான் நலமாக இருப்பதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நாம் வீட்டிற்கு சென்று விடலாம் எனக் கூறியதாக தெரிவித்துள்ளனர் அக்டோபர் 22-ஆம் தேதி அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார் என்றும் வேறு அறைக்கு மாற்றும்போது அமைச்சர் நிலோபர் கபில் உள்பட ஒரு சில அமைச்சர்கள் பார்த்ததாகவும்  கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலை சரியான பின்னரும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நலத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் தான் வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும், அதுவும் அவரின் அனுமதியோடுதான் சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது என சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்தாள்ளார்.

தற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)

தொடர்புடையவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close