குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்10பேர் பலியான சோகம்: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தேனி குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரில் 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுகுமலைப் பகுதியில் இருந்து நேற்று அனைவரும் மலையில் இருந்து இறங்கும்போது, திடீரென ஏற்பட்டக் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.

தீயில் சிக்கி சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோரும், ஈரோட்டைச் சேர்ந்த விவேக், விஜயா, தமிழ்ச்செல்வி ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது உடல்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. களத்திலிருந்த கமாண்டோக்கள், 8 பேரின் உடல்களை ஹெலிகாப்டர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஒருவரது உடல் டோலி மூலம் எடுத்துவரப்பட்டது. இதையடுத்து 9 பேரின் உடல்களும் தேனி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரில் 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த புனிதா, ஹேமலதா, சுபா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு  அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை விவேக் மற்றும் தமிழ்செல்வன் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த பிபின், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலா ஆகியோரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.