சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததில் பலர் பலி

கோவை : சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார்,தீயணைப்புத்துறையினர் பொக்லின்,கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி சிக்கியவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர்,கோவை,பல்லடம் பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

இந்த திடீர் விபத்தில் ஐந்துபேர்வரை இறந்திருப்பதாக தெரிகிறது. அரசு பேருந்து ஓட்டுனர் சிவக்குமார், துளசிமணி (50), தாரணி (20) கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் பிணம் என இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5 பேர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் மோசமான நிலையில் இருப்பதாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளாததாலே விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில தினங்களாக கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்மழை பெய்த காரணத்தால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்ததாக அருகில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5க்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது